தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி திருநாளை முன்னிட்டு உத்தரப்பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அயோத்தி, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மண்ணால் ஆன விளக்குகளை கொள்முதல் செய்யும் பணிகளும் நடைபெற்றன. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டில் 30 நிமிடங்களுக்கும் கூடுதலாக இந்த விளக்குகள் எரியும். நீண்ட நேரம் எரியும் விளக்குகளை மக்கள் காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கு முன்பு, விளக்குகள் விரைவாக அணைந்து விடும். இதனால், விளக்கொளியின் பிரமிப்பான அழகை மக்கள் பார்க்க முடியாமல் போனது. விளக்குகள் நீண்ட நேரம் எரிவதற்காக தலா 40 மி.லி. எண்ணெய் விளக்கில் ஊற்றப்படும். கடந்த ஆண்டு தீபோற்சவத்தின் போது, அயோத்தியா நகரில் 9 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு இருந்தது. இதனை முறியடிக்கும் முயற்சியாக இந்த ஆண்டில் 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த சாதனையை படைப்பதில், ஆவாத் பல்கலை கழகத்தின் மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும் பெருமளவில் பங்காற்றினார்கள். பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.