இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு நாளைக்கு சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, மதுரை, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய விரைவு பேருந்துகள் மற்றும் அனைத்திற்கும் மேற்பட்ட டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நவம்பர் 9, 10ஆம் தேதி அன்றே சொந்த ஊருக்கு செல்ல பலரும் திட்டமிட்டு வைத்திருப்பர். அந்தவகையில், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மொத்தம் 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர் சென்றவர்கள் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக 13ஆம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.