பிரபல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ளவர் இரா.முத்தரசன். 72 வயதான இவர் அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசனுக்கு, கடந்த 2 நாட்களாக கடுமையான சளி, இருமல் இருந்தது. அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், கோவிட் 19 பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டொரு நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றபடி, தோழர் இரா. முத்தரசன் உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.