பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்ட எல்லையான சிவகிரியில் காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் காரில் 600 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, காரில் வந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர், தென்காசி மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவரான தி.மு.க.வை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தி.மு.க. பிரமுகர் போஸ் மற்றும் கார் டிரைவர் லாசர் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட இருவரும் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ என்றனர்.
மேலும் அவர்கள் கொண்டு சென்ற 600 கிலோ குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பெங்களூரில் இருந்து அதனை அவர்கள் வாங்கி வந்து கடைகளில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க முயன்றது தெரியவந்தது.
போதைப்பொருள் தவிர அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.36,500 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் சுபாஷ் சந்திரபோஸை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் அவர் கூறியதாவது,
‛‛தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.