திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் முன்னணி தலைவர்களின் தொலைபேசிகளை சிபிஐ, இடி மற்றும் ஐடி போன்ற மத்திய ஏஜென்சிகள் சட்டவிரோதமான முறையில் ஒட்டு கேட்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆளும் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு, திமுக வேட்பாளர்கள், அதன் முன்னணித் தலைவர்கள், அவர்களது நண்பர்கள், நெருங்கிய உறவினர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. இதுதொடர்பாக, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்துள்ள புகாரில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.
இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.