Annamalai: தமிழ் மொழியை வைத்து, 70 ஆண்டு காலமாக மேடை போட்டு வியாபாரம் செய்து, திமுக அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மதுரையில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இனி தமிழ்ச் சங்கம் என்றால், உலகம் முழுதும் பிரதமர் மோடி பெயர்தான் நினைவுக்கு வரும். இதெல்லாம் பிரதமராக இருந்து மோடி தமிழுக்கு ஆற்றிய தொண்டு. ஆனால், தமிழகத்தில் உள்ள தமிழ் பேசும் தலைவர்கள் செய்தவைகளைப் பார்ப்போம். தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் தி.மு.க., ஆட்சியில், 2022ல் நடந்த 10ம் வகுப்பு தமிழ் மொழித் தேர்வில், 55,000 குழந்தைகள் தேர்ச்சி பெறவில்லை. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், அம்மாநிலத்தோரும்; மாநிலத்தை ஆளுவோரும் தாய்மொழியை மறந்ததில்லை.
தமிழகத்தில் மட்டும் தான் தாய் மொழியை கொன்று கொண்டிருக்கின்றனர். தமிழ் மொழியை வைத்து, 70 ஆண்டு காலமாக மேடை போட்டு வியாபாரம் செய்து, அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சி அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, தமிழ் மொழிக்கு செய்த நன்மையின் லட்சணம் இது தான். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு இலக்கணமாக, தி.மு.க., ஆட்சி உள்ளதாக விமர்சித்துள்ளார்.