பாஜக கொடுப்பதாக சொன்ன ரூ.15 லட்சம் எங்கே என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், இன்று திமுக சொன்ன மாதம் 1,000 ரூபாய், உரிமைத் தொகை கொடுக்குறாங்க… நீங்க சொன்ன 15 லட்சம் ரூபாய் எப்போ கொடுக்க போறீங்க? என்று பாஜகவிடம், திமுக தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடி 2014 ஆம் தேர்தலின் போது, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் வழங்கலாம் என தெரிவித்திருந்தார். அவர் பேசியதை சுட்டிக்காட்டி அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 லட்சம் கூட வேணாம் 15000 ரூபாய் ஆச்சும் கொடுத்தீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அவ்வளவு பணத்தை வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றுதான் பிரதமர் மோடி சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என்று சொல்லவில்லை, வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டவும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி சொன்ன 15 லட்சம் குறித்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது மோடி பேசிய வீடியோவை வெளியிட்டு திமுக சொன்ன மாதம் 1000 ரூபாய், உரிமைத் தொகை கொடுக்குறாங்க… நீங்க சொன்ன ஆளுக்கு 15 லட்சம் எப்போ கொடுக்க போறீங்க? என்று பாஜகவிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதேபோல் திமுக – பாஜக இடையே மோடி சொன்ன 15 லட்சம் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், நேற்று மதுரைத் திமுக தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஒட்டி உள்ள போஸ்டரில் மோடி சொன்ன 15 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்ததா ? ஆம் என்றால் ரசீது காட்டுங்கள் என்றும் அப்படி காட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறிப்பு (சங்கிகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம்) என்ற வாக்கியங்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய போஸ்டரை மாநகரில் பல்வேறு பகுதியில் திமுகவினர் ஒட்டியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.