திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மனைவிக்கு ஆதரவாக திமுக எம்.பி கனிமொழி குரல் கொடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த சீமான், அரசியல் பொதுக்கூட்ட மேடையிலேயே திருச்சி எஸ்பி வருண்குமாரை காட்டமாக விமர்சித்தார். அந்த பேச்சுக்கு எதிராக சீமானுக்கு வருண் குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
பின்னர், சமூக வலைதளங்களில், நாம் தமிழர் கட்சியினர், தன்னையும், தன் மனைவி, குடும்பத்தினரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும், அருவறுக்கத்தக்க வகையிலும் விமர்சிப்பதாக திருச்சி எஸ்பி வருண்குமார் குற்றம்சாட்டினார். மேலும், அது தொடர்பாக சைபர் கிரைமிலும் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.