சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-
நீட் தேர்வை பொறுத்தவரை பாஜகவுக்கு அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் இல்லை. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு நல்லது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் இருந்து நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிக்கின்றனர். தமிழகத்தில் ஆரம்ப காலங்களில் நீட் தேர்வால் பிரச்னை இருந்தது உண்மை தான். காரணம், தமிழ் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாடத்திட்டத்திற்கும், நீட் தேர்வுக்கு தயாராவதற்கான பாடத்திட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
ஆனால் பாடத்திட்டம் மாற்றமடைந்த பிறகு, மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். நீட் தேர்வு விவகாரத்தில் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை திமுக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும் திமுகவினர் மாணவர்களை தவறாக வழி நடத்தி தற்கொலைக்கு தூண்டுகின்றனர். மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசே காரணம். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் நீட் தேவை எதிர்க்கவில்லை. எந்த மாநில முதலமைச்சர்களும் நீட் வேண்டாம் என எதிர்க்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார்.
நீட் வேண்டாம் என திமுக சொன்னாலும், நீட்தேர்வு இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் டீ மாஸ்டரின் மகள் கூட நீட்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தேவை இல்லாதது. இது, தமிழகத்தின் கருப்பு நாள். மின் கட்டண உயர்வை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இது திமுகவுக்கு தேர்தலில் பெரிய அடியாக இருக்கும் என கூறினார். மேலும் அவர், ராகுல் காந்தி பாதை யாத்திரை என்பது மக்களை இணைப்பதா அல்லது பிரிப்பதா என்பது தெரியவில்லை என கூறினார்.