கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. ரகசியமாக சப்போர்ட் செய்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டிய பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அண்ணாமலை வெற்றி பெற கோவையில் திமுக டம்மி வேட்பாளரை போட்டுள்ளது என்றும், தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெறுவதற்காக அந்தத் தொகுதியை பா.ஜ.க தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.
பிரச்சாரத்தின் போது சீமான் பேசியதாவது, “அதானி பணம் எதுவுமே கிடையாது. அனைத்தும் மோடியின் பணம். அனைத்து நிறுவனங்களிலும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி மிரட்டி மோடி பணம் வாங்கினார். எங்கெங்கு அமலாக்கத் துறை ரெய்டு நடந்ததோ, அங்கே பாஜக பணம் பெற்றுள்ளது. லாட்டரி மார்டினிடம் திமுக ரூ.550 கோடி வாங்கியதுபோல், பாஜகவும் வாங்கியுள்ளது. கொள்கையில் திமுகவும், பாஜகவும் வேறு என சொல்கிறார்கள். ஆனால் மிரட்டி பணம் வாங்குவதில் இரு கட்சிகளும் கூட்டுதான்.
பாஜகவை எதிர்க்கிறோம், மோடியை வரவிடக் கூடாது எனக் கூறிக்கொண்டு, கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. இதை மறுக்க முடியுமா? வேலை செய்யாதீர்கள் என திமுக சொல்லியுள்ளது. அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தொகுதியிலேயே இல்லை.
திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்திய ஸ்டாலின் ஏன் கோவையில் நடத்தவில்லை? அனைத்தும் நாடகம். தூத்துக்குடியில் கனிமொழிக்காக தமாகவுக்கு சீட் கொடுத்து பாஜக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் அண்ணாமலைக்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பா.ஜ.க எதிர்ப்பதாக இருந்தால், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சதுரங்கம் மற்றும் கேலோ இந்திய போட்டிக்கு பிரதமரை வரவைக்கணும்?. அப்பா சாயந்தரம் சந்திப்பார். மகன் காலையில் சந்திப்பார். எந்த மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சருக்கு பிரதமர் நேரம் கொடுத்து சந்திருக்கிறார்” என்றார்.