ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 67.97% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீதா லட்சுமி மற்றும் சுயேட்சைகள் உட்பட 46 பேர் களத்தில் இருந்தனர்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எண்ணப்பட்ட 17 சுற்றுகளின் முடிவில் திமுக 1,14,439 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 23,810 வாக்குகளும் பெற்றுள்ளன.