மழைக்காலம் வந்துவிட்டாலே போதும், ஆஸ்துமா பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக வரத் தொடங்கும். பருவ மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், அடிக்கடி மழை பெய்வதாலும், ஒவ்வாமை அதிகரித்து சுவாச அமைப்பில் நோய்த்தொற்று உண்டாகிறது. இதனால் ஆஸ்துமா பாதித்துள்ள குழந்தைகளை அடிக்கடி மருத்துவமணைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனினும், இதுகுறித்த சரியான அறிவோடு முறையாக மேலாண்மை செய்தால், பெற்றோர்களாகிய நீங்கள் மழைக்காலங்களில் ஏற்படும் பல ஆபத்துகளிலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளலாம்.
மழைக்காலத்தில் ஈரப்பதம், பூஞ்சைகள், பூச்சிகள், சுவாசப் பிரச்சனைகள் மற்றும் காசு மாசுபாடு போன்றவை அதிகமாக இருக்கும். இவைகள் ஒவ்வாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
ஒவ்வாமையை உண்டாக்கும் சில பூச்சிகள் வெயில் காலம் மட்டுமில்லாமல் மழைக் காலத்திலும் அதிகமாக வரும். இவை குழந்தைகளுக்கு ஒவ்வாமையை தூண்டி விடுகின்றன. இதன் காரணமாக சளி, காய்ச்சல் போன்ற சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள் மழைக்காலங்களில் அடிக்கடி வரும். கூடுதலாக, இந்நேரத்தில் காற்று மாசும் அதிகமாக இருப்பதால் குழந்தைகளிடத்தில் ஆஸ்துமா அறிகுறிகளும் அதிகமாக தென்படுகிறது. ஆகவே, மழைக்காலத்தில் உங்கள் குழந்தைக்கு எது ஆஸ்துமாவை தூண்டக் காரணமாக இருக்கிறது என்பதை பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் வீட்டிலுள்ள அறைகளை சுத்தமாக, ஈரமில்லாமல்ம் காற்றோட்டமாக வைத்திருங்கள். இதன் மூலம் பூஞ்சைகள் வளர்வதை குறைக்கலாம். தூசியான இடங்களை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். படுக்கைகளை சூடான நீரில் கழுவுங்கள். உங்கள் குழந்தைகளை அடிக்கடி கை கழுவ ஊக்கப்படுத்துங்கள். எப்படி கை கழுவ வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். நோய்வாய்ப்பட்டவர்களோடு நெருக்கமாக இருக்க கூடாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். மாசுபாடு அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். தூய்மையான, புகை இல்லாத உட்புறச் சூழலை அமைத்துக் கொள்ளுங்கள்.