கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தை கடந்து செல்ல மாட்டோம் உரிய நடவடிக்கை எடுப்போம் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் வேறுவிதமாக விஷயங்களை கிளறிவிட்டு அரசியல் செய்வது தலைவர்களுக்கு நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா. கடந்த சில நாட்களாக இவர் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கால் மூட்டில் தசை கிழிந்துள்ளதால் வலி ஏற்பட்டுள்ளதாக கூறி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் அவரது வலது கால் மூட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் காலில் வலி ஏற்பட்டதும் அந்த மருத்துவமனையில் இருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு பரிசோதனை செய்ததில் காலில் சீழ் பிடித்தது தெரியவந்தது. கட்டு இறுக்கமாக போடப்பட்டதால் சீழ்பிடித்து வெண்ணிறத்தில் திரவம் வெளியேறி உள்ளது. உள்ளுக்குள்ளேயே பாதிப்பு ஏற்படுத்தியதால் அவசரஅவசரமாக பெற்றோர்கள் அனுமதியுடன் கால் வெட்டப்பட்டது.
காலை இழந்தும் மாணவி மனம் தளரவில்லை. வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் இது அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. ’’ நண்பர்களே, உறவினர்களே நான் சீக்கரமா ரெடி ஆய்ட்டு கம்பேக் குடுப்பேன். என் மாஸ் என்ட்ரிய குடுப்பேன். ரிட்டர்ன் வருவேன்னு நீங்க நம்பிக்கை வையுங்க எதுக்கும் வருத்தப்படாதீங்க’’ என அவர் நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில்தான் கால் இழந்த நிலையில் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பாகமாக பாதிக்கப்பட்டு செயலிழந்து வந்துள்ளது. இதையடுத்து சிறுநீரகம், கல்லீரல், கணையம் , தொடர்ந்து இதயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் இருவரை இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.