வசதி படைத்த நபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குகிறார்களா என்று விசாரணை செய்து பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நியாய விலைக் கடைகள் சரியாக செயல்படவும், உணவு பற்றாக்குறைகளை கலையவும் சரியான அடிப்படை தேவையுள்ள பொதுமக்கள் விரைவில் பயன்பெறவும் அதுகுறித்து ஆலோசிக்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பிறகு உணவுத்துறை அமைச்சகத்தால் பொது விநியோகத் திட்டத்தில் உள்ள துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவும், உணவுப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொருட்கள் வாங்க வருபவர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும் என்றும் மழைக் காலங்களில் மூட்டைகளை தரையில் வைக்காமல் மரப் பலகைகளை பயன்படுத்தி அதன்மேல் அடுக்கி வைத்து உணவுப்பொருட்களை பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை கண்டறிந்து அதை பிரிப்பதற்கான முன்மொழிவினை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வசதி படைத்த நபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதையும் விசாரனை செய்து பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.