நம்மில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். ரயிலை ஓட்டுபவர் யார்? இவ்வளவு பெரிய ரயிலை ஒருவர் தனியாக ஓட்டுவாரா? எவ்வளவு நேரம் ஓட்டுவார், முழு பாதைக்கும் ஒருவரே ஓட்டுவாரா ? அவரது சம்பளம் என்ன?. இப்படி ஏராளமான கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். மற்ற துறைகளின் பணிகளை பற்றி கூட அதிகம் கேட்டிருப்போம். ஆனால், ரயில் சார்ந்த பணிகள் பற்றி அதிகம் நமக்கு தெரியாது. இப்போது அதுபற்றி தெரிந்துகொள்வோம்.
இந்தியர்களைப் பொறுத்தவரை, ரயில்வே பயணத்திற்கு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ரயிலில் பயணம் செய்வது வித்தியாசமான அனுபவம். ரயில் பயணத்தில் பெரும்பாலானவர்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்கும். பல கனவுகளோடு செல்லும் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்துக் கொண்டு போகும் ரயிலின் ஓட்டுனர் “லோகோ பைலட்” என்று அழைக்கப்படுகிறார். ஒரு விமானத்தை விமானி இயக்குவது போல் ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் இருப்பார்கள்.
லோகோ பைலட் யார்..?
லோகோ பைலட் என்பவர் ரயில்களை ஓட்டுபவர். ரயிலின் இயக்கத்தை மேற்பார்வையிட ஒரு நபர் தேவை. இது இந்திய ரயில்வேயில் ஒரு உயர் பதவி. ஆனால், எந்த ஒரு நபரும் நேரடியாக லோகோ பைலட்டாக நியமிக்கப்பட மாட்டார்கள். முதலில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டாக சேரும் நபர் அனுபவம் பெற்ற பின்னர் பதவி உயர்வு மூலம் லோகோ பைலட்டாக மாறலாம்.
லோகோ பைலட்டின் கடமைகள் என்ன?
அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டின் கடமைகள், லோகோ பைலட்டுக்கு ரயிலை சீராக இயக்க உதவுவதாகும். ஒரு லோகோ பைலட்டின் பணி, ரயில் இன்ஜினை முறையாகப் பராமரித்தல், ரயிலில் ஏதேனும் பழுதானால் அவற்றை சரிசெய்தல், சிக்னல் மாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்புகொள்வது ஆகும்.
லோகோ பைலட் ஆவது எப்படி..?
இதற்காக தனியே ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board) தேர்வுகளை நடத்தும். இதற்கு நீங்கள் குறிப்பிட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த உதவி லோகோ பைலட் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். 2 நிலைகளிலும் கணினி அடிப்படையிலான தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் லோகோ பைலட் ஆகலாம்.
லோகோ பைலட்டின் சம்பளம் எவ்வளவு..?
லோகோ பைலட் பதவிக்கான சம்பளம் ஊதிய நிலை 2 (Level 2 Pay Matrix) ஆகும். தொடக்க அடிப்படை ஊதியம் ரூ.19,900 ஆக இருக்கும். மேலும் வீட்டு வாடகை கொடுப்பனவு, அகவிலைப்படி, போக்குவரத்து கொடுப்பனவு உள்ளிட்ட சலுகைகளும் உள்ளன.
லோகோ பைலட்டின் வேலை நேரம் :
மற்ற வேலைகளை போலவே லோகோ பைலட்டுகளுக்கும் ஒரு ஷிப்ட் என்பது 8 மணி நேரம்தான். அதற்கு கொஞ்சம் முன்னர் அல்லது பின்னர் எதாவது ஒரு ஸ்டேஷன் வந்தால் அடுத்த பைலட் மாறிக்கொள்வார். இதற்கிடையே, சேரும் இடமே வந்துவிடும் என்றால் அவரே ஓட்டிச்செல்வார். லோகோ பைலட்டுகள் வாரத்தில் குறைந்தது 36 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் ஓவர் டைம் அலவன்ஸ் என்ற கூடுதல் சம்பளமும் கிடைக்கும்.