பொதுவாக கடும் மன அழுத்தத்தில் இருக்கும் போது அழுதால் மனதில் உள்ள பாரம் குறையும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தூக்கத்தில் அழுவது சாதாரண விஷயம் அல்ல. மனநலப் பிரச்னைகளைக் கையாளும் போது அல்லது சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்தைச் சந்தித்தால், அவர்கள் தூக்கத்தில் அல்லது எழுந்த பிறகு அழுவதாக கூறப்படுகிறது.
வேலை, சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும். இதனால் மன அழுத்தம் நமக்கும் ஏற்படும். அவ்வாறான நிலையில், சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, அவற்றைச் சமாளிக்க உங்கள் உடலுக்கு ஒரு வழி தேவைப்படுகிறது. உறக்க நிலையில், இருக்கும் போது உணர்ச்சிகளின் உச்ச நிலை காரணமாக கண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான மனநிலைக் கோளாறாகும். இது சோகம், நம்பிக்கையின்மை மற்றும் ஒருவர் அனுபவிக்கும் விஷயங்களில் ஆர்வத்தை இழப்பது போன்ற தொடர்ச்சியான உணர்வுகளால் ஏற்படுகிறது.
தூக்கம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருக்கிறது. இதனாலும் உங்கள் தூக்கம் கெடலாம். அழுகையும் ஏற்படுகிறது. சில சமயங்களில் நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றாமல் கடந்து செல்கிறோம். பகலில் நன்றாக இருப்பது போல் பாசாங்கு செய்தாலும், இரவில் உறக்க நிலையில் நினைவுகள் மனதில் காட்சிகளாக ஓடும் போது உறக்கம் கெட்டு கண்ணீர் வருவதாக கூறப்படுகிறது.
வழக்கமாக நம்மில் பலருக்கு கெட்ட கனவுகள் வரும். குழந்தை பருவத்தில் இதுபோன்ற பயமுறுத்தும் கனவுகள் அதிகமாக இருப்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம். ஆனால், பெரியவர்கள் உட்பட எந்த வயதினருக்கும் அவை நிகழலாம். நீங்கள் ஒரு கனவில் இருந்து எழுந்திருக்கும் போது அது உங்களை பயமாகவும், வருத்தமாகவும், அமைதியற்றதாகவும் உணர வைக்கும். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகளுக்கு முழுமையாகத் தெரியவில்லை. கடினமான உணர்ச்சிகள், மன அழுத்தம், இக்கட்டான சூழ்நிலைகள் தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றன.
* பராசோம்னியா என்பது தூக்கத்தில் நடப்பது மற்றும் தூக்கத்தில் பேசுவது. இதுவும் தூக்கத்திற்கு தடையாக இருக்கும்.
* சில மருந்துகள் அசாதாரண எதிர்வினைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு புதிய மருந்தை ஆரம்பித்திருந்தால், அதுவும் காரணமாக இருக்கலாம். உங்கள் மருந்துகளில் ஏற்படும் மாற்றங்களும் விளைவுகளும் உங்கள் தூக்கத்தை கெடுக்கலாம்.
* உங்கள் இதயமே நொறுங்கும் சம்பவம் உங்களின் தூக்கத்தை குறைக்கலாம்.