மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் நகரில் 40-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் செல்லப் பிராணியின் உரிமையாளர்கள் மீது வரி விதிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். சுற்றுப்புற குடியிருப்பாளர்களின் “பாதுகாப்பு மற்றும் தூய்மையை” கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சாகர் மாநகராட்சி இந்த வரைவை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சாகர் நகராட்சி ஆணையர் சந்திரசேகர் சுக்லா கூறுகையில், “தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதையும், செல்லப்பிராணிகள் மலம் கழிப்பதால் பொது இடங்களை அசுத்தமாக்குவதையும் தொடர்ந்து, நாய்களுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்க ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

செல்லப் பிராணி வளர்த்துவரும் லாவேஷ் சௌத்ரி என்பவர் கூறுகையில், “செல்லப் பிராணிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க நகராட்சி இடம் கொடுக்க வேண்டும். வரி விதிப்பது தவறு. பாதுகாப்புக்காக நாய்களை வளர்க்கிறோம். நாய்களை வளர்ப்பதற்கு நாங்கள் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி விரும்பினால், நாங்கள் நாய்களை வெளியே அழைத்துச் செல்ல எங்களது கார்டன் போன்ற இடத்தை ஒதுக்கித் தர வேண்டும்” என்றார். இதுகுறித்து மற்றொரு நபர் கூறுகையில், “தெருநாய்களை மாநகராட்சி நிர்வாகம்தான் கவனிக்க வேண்டும். ஏற்கனவே செல்லப்பிராணிகளை வளர்த்து வருபவர்களிடம் வரி கேட்பது நியாயமற்றது” என்று தெரிவித்தார்.