ஒற்றையாக வளர்ந்த குழந்தைகள் என்றாலே இந்த எதிர்மறையான கண்ணேட்டம் பலருக்கும் வருகிறது. ஆனால் இந்த குணாதீசியங்கள் குழந்தைகளைப் பொறுத்தது மட்டுமல்ல என பல ஆய்வுகள் கூறுகின்றன.பல விஷயங்களில் தனியாக வளரும் குழந்தைகள் உடன்பிறந்தவர்களுடன் வளர்ந்தவளிடமிருந்து வேறுபடுவதில்லை என்கின்றனர்.
“உடன் பிறந்தவர்களுடன் வளர்ந்த குழந்தைகளை விட தனியாக வளரும் குழந்தைகளுக்கு சமூகமாக பழகுவதில் குறைபாடுகள் இருக்கும் என்ற பொதுக் கருத்து எவ்வித ஆதாரமும் இல்லை” என லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் Demographics of the Center for Longitudinal Studies இணை பேராசிரியர் ஆலிஸ் கோய்சிஸ் கூறியுள்ளார்.
கோய்சிஸ் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், குடும்பத்தின் சமூகப் பொருளாதார சூழ்நிலை அல்லது குழந்தைகளுக்குக் கிடைக்கும் உணர்ச்சி வளங்கள் போன்ற பல காரணிகள் குழந்தைகளின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துகின்றன. குணாதீசியங்கள் தனியாக வளர்வதனால் மட்டுமே உருவாவதில்லை என்கிறார். சில ஆய்வுகள் கோய்சிஸின் ஆய்வுக்கு முரண்பட்ட காரணங்களைத் தெரிவித்தாலும், குழந்தைகளின் சூழல் தான் அதற்கு காரணம் என்கிறார் கோய்சிஸ்.
உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு வளமான குடும்பத்தில் வளரும் குழந்தை, ஒற்றைக் குழந்தையாக இருந்தாலும் பிற குழந்தைகளை விட ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்கும். ஆனால் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கும் குழந்தை மோசமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம். சரி, ஒரு ஒற்றைக் குழந்தையாக பிறப்பதில் இருக்கும் சாதக பாதகங்களைப் பார்க்கலாம்.
ஒற்றைக் குழந்தை மட்டும் இருக்கும் குடும்பங்கள் கடந்த 40,50 ஆண்டுகளாக தான் பெருகி வருகின்றன. உடன்பிறந்தவர்களுடன் பிறக்கும் குழந்தைகள் மூத்தவர்களாக பிறக்கிறார்களா அல்லது எத்தனையாவது குழந்தையாக பிறக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சாதக பாதகங்கள் அமையும். தனியாக வளரும் குழந்தை தம் வயதொட்டவரை விட பெற்றொர்களிடம் அதிகம் பேசுவதனால் அவர்களின் மொழித்திறன் நன்றாக இருக்கும். இது அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்களைவிட பெரியவர்களிடம் ஒற்றைக் குழந்தைகளால் எளிதாக பழக முடியுமாம். தனியாக இருப்பதனால் இருக்கும் நேரத்தை எப்படி செலவிடுவது என்பதை நன்றாக திட்டமிடுவார்கள்.
சில நேரங்களில் உடன்பிறந்தவர்கள் இல்லாமல் இருப்பது மோசமான சூழலையும் உருவாக்கலாம். குறிப்பாக பெற்றோருடனான உறவு சரியாக இல்லாத குழந்தைகளுக்கு. உடன்பிறந்தவர்கள் இருப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கும். மோசமான சூழல்களில் ஏற்படும் மன அழுத்தத்தை இது குறைக்கலாம். தனியாக வளர்ந்த குழந்தைகள் பெற்றோர் அல்லாத நெருங்கிய குடும்ப நண்பர்கள், சொந்தங்களிடம் நெருக்கமாக இருப்பதைப் பார்க்கலாம். தங்கள் வயதொட்ட உடன்பிறப்புகள் இல்லாமல் இருப்பதால் அதிக விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.