32 இன்ச் முதல் 65 இன்ச் வரையில் உங்களிடம் எந்தவொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி இருந்தாலும் சரி.. மனதை தேற்றிக்கொள்ளவும். ஏனென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் அப்படி ஒரு வேலையைத்தான் பார்த்துள்ளது. மேலும், புதிய ஒன்பிளஸ் டிவி ஒன்றை வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தாலும், அதை அப்படியே கைவிட்டு விடுங்கள். ஏனென்றால், ஒன்பிளஸ் நிறுவனம், இனிமேல் தனது ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் விற்பனை செய்யபோவது இல்லை. இதை உறுதிப்படுத்தும் வண்ணம், ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (OnePlus Official Website) இருந்த ஸ்மார்ட் டிவிகள் பிரிவு (Smart TV Section) மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக, ஒன்பிளஸ் வலைத்தளத்தில் உள்ள ஸ்மார்ட் டிவிகள் பிரிவுக்குள் நுழைய முடிந்தது. அங்குள்ள டிவி மாடல்களை பார்க்க முடிந்தது. ஆனால், ‘பை’ பட்டனை (Buy Button) கிளிக் செய்த போது “404: இந்த பக்கம் கிடைக்கவில்லை” என்று சொல்லும் வெற்றுப் பக்கத்திற்கு திருப்பிவிடப்பட்டது. ஆனால், தற்போது ஒன்பிளஸ் வலைதளத்தில் ஸ்மார்ட் டிவிகள் பிரிவையே பார்க்க முடியவில்லை. இருப்பினும் அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற இ-காமர்ஸ் வலைத்தளங்களின் வழியாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளானது, தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பது போல் தெரிகிறது.
ஆனால், அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக இனிமேல் வாங்க கிடைக்காது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை குறித்து சரியான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒன்பிளஸ் டிவிகள் மற்றும் பேனல்களுக்கு இன்னமும் ஒரு வருட உத்தரவாதம் உண்டு என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே புதிய ஸ்மார்ட் டிவியை வாங்கும் தேடலில் உள்ள எவரும் ஒன்பிளஸ் மாடலை வாங்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 2023 இல், ஸ்மார்ட் டிவி பிரிவில் இருந்து பின்வாங்கவும், உற்பத்தியை நிறுத்தவும் ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பல அறிக்கைகள் வெளியாகின. தற்போது அந்த அறிக்கைகள் உண்மையாகியுள்ளன. ஒன்பிளஸ் மட்டுமல்ல, ரியல்மி (Realme) நிறுவனமும் கூடஇந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி விற்பனையை நிறுத்திவிட்டது. இந்நிறுவனமும் கூட தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஸ்மார்ட் டிவி பிரிவை நீக்கியுள்ளது.