தமிழ்நாடு அரசிற்குக் கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றவர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதிமுக சார்பில் திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ”தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கோடிகளில் கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றவர்கள் மின் கட்டண உயர்வு என ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அரிசிக்குக் கூட ஜிஎஸ்டி வரி விதித்திருக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து அதிமுகவினர் ஏன் போராட்டம் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை எதிர்த்து தைரியம் இருந்தால் அதிமுகவினர் போராட்டம் நடத்தட்டும்” எனக் கூறினார்.