நம் இந்தியா நமக்காக உதித்த நாளான சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, நமது முதல் சுதந்திர தின விழா எப்படி கொண்டாடப்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்.
1947, ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், மனதிலும் நீங்காமல் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகளை கடந்த இன்றைய நாள் நம் இந்தியா நமக்காக உதித்த நாள். நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நம் இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழா குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.
இறையாண்மை கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது, பல ஆயிரக் கணக்கான தியாகிகள், புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லக் கூடியதாகும். இன்று நாம் அவ்வப்போது சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காள தேசம், எனப் பெருவாரியான பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது இந்தியா. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நம் நாட்டின் தென்னிந்தியாவைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தனர். மன்னர் ஆட்சிகளைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் (1206-1707), தில்லி சுல்தானகம் (1206-1526), தக்காணத்து சுல்தானகங்கள் (1490-1596), விஜயநகரப் பேரரசு (1336-1646), முகலாயப் பேரரசு (1526-1803), மராட்டியப் பேரரசு (1674-1818), துர்ரானி பேரரசு (1747-1823), சீக்கியப் பேரரசு (1799-1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.
விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா. போர்ச்சுகீசியரான அவர், கடல் வழியே இந்தியாவிற்கு வழியைக் கண்டு பிடித்து, நமது நாட்டில் கால்பதித்தார். வாஸ்கோடகாமா வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்குச் சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். இதுவே, பண்டமாற்று முறைக்கு வித்திட்டது.
போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டிற்கு வருகை தந்ததால், அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை அமைக்க எண்ணி, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். 1619 ஆம் ஆண்டில், பிரெஞ்சுக்காரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும் நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, தனது அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்த ஆங்கிலேயர்கள் முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர்.
உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் முதல் உலகப் போர் ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் பல்வேறு புரட்சிகள் வெடித்துக் கொண்டிருக்க அமைதியால் மட்டும் தான் சுதந்திரம் அடைய முடியுமென்று எண்ணி, 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாகிரகம்’ நடத்தினார் காந்தி. அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன், ஜூன் 3 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா என்றும், முஸ்லீம் பாகிஸ்தான் என்றும் பிரித்தளிப்பதாக அறிவித்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது.
மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.
இன்றைய தினம் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதமர், செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. நாமும் இந்தியக் குடிமகன்களாக நம்மை சுதந்திரமாக வாழவைத்த போராட்ட தியாகிகளின் நினைவை போற்றுவோம்.