இந்தியாவில் 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. கொரோனா நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி முதல், இந்தியாவில் 18 வயதுகு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.. நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 75நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மக்களவையில், நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.. அதன்படி “ ஜூலை 18 வரை மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் (97.34 சதவீதம்) அரசு கோவிட் தடுப்பூசி மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.. ஜூலை 18 ஆம் தேதி நிலவரப்படி, 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்..
மேலும் ” சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், இந்த ஆண்டு மார்ச் 16 முதல் அரசு தடுப்பூசி மையங்களிலும், 18-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் தனியார் தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன..” என்று தெரிவித்தார்..
இந்தியாவின் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 98% பேர் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.. அதே நேரத்தில் 90 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..