நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட 1,448 பேர் குழந்தை பெற்றெடுத்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற விவரங்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,101 பிரசவங்களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 347 பிரசவங்களும் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், அதிகபட்சமாக மேலப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 88 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்துள்ளதாகவும், மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 44 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கொரோனா காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்ததே இதற்கு காரணம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் அளிக்காதது தான் சிறு வயதில் தாய்மையடையும் நிலை அதிகரிப்பதாக சமூக செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி தெரிவித்துள்ளார். இந்த செய்தி கவலையளிப்பதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி, இதற்கான பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டியது அரசின் கடமை என கூறியுள்ளார்.