உலகில் நடக்கும் டி20 கிரிக்கெட் தொடர்களில் அதிகம் பணம் புழங்கும் தொடர் என்றால், அது ஐபிஎல் தான். 18 சீசன்களாக நடந்துவரும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், சிறந்த வீரர்களையும், இளம் திறமையாளர்களையும் உள்ளடக்கியது. அதிக ரசிகர்களைக் கொண்ட தொடரும் ஐபிஎல் தான். மேலும், வீரர்களுக்கு அதிக சம்பளம் தரும் தொடராகவும் ஐபிஎல் இருந்து வருகிறது. ஆனால், போட்டியில் முக்கியமான பங்களிப்பை செய்யும் நடுவர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா..?
இந்தியா டுடே தரவுகளின்படி, ஒவ்வொரு போட்டியிலும் களத்தில் நிற்கும் நடுவர்களுக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாகவும், களத்திற்கு வெளியில் இருக்கும் 4-வது நடுவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கோடிக்கணக்காக சம்பளம் வாங்குவதுடன், அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அதற்கான தொகையைப் பெறுகின்றனர்.
சராசரியாக இந்த போட்டிக்கான சம்பளம் ஒரு வீரருக்கு ரூ.7.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதை ஒப்பிடுகையில் நடுவர்களுக்கு நல்ல தொகையே சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால் உண்மையாகவே உலகின் ‘பணக்கார கிரிக்கெட் தொடரில்’ பணியாற்ற அனைவருமே விரும்புவது உண்டு. பல கோடி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போட்டியின் ஒவ்வொரு கணத்தையும் உற்று நோக்கி தீர்ப்பளிக்கும் நடுவர்கள் கையாழும் அழுத்தம் நம்மால் புரிந்துகொள்ள முடியாதது. நடுவர்கள் சிறிய தவறுகள் செய்தால் கூட, அது சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது.
உள்நாட்டு போட்டிகளில் சம்பளம் எவ்வளவு..?
ஐபிஎல் மட்டுமின்றி, ரஞ்சி டிராபி போட்டிகளின்போது, 4 நாட்கள் நீண்ட நேரம் களத்தில் இருக்கும் நடுவர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 சம்பளமாக வழங்கப்படுவதாக லைவ் மிண்ட் தளம் தெரிவிக்கிறது.