fbpx

Valentine’s day எப்படி உருவானது தெரியுமா..? இந்த வரலாறை தெரிஞ்சிக்கோங்க..!!

காற்று புகாத இடத்தில் கூட காதல் புகுந்து விடும். இளசுகள் முதல் பெருசுகள் வரை, கோடான கோடி மக்களுக்குப் பொதுவான ஒரு நாள் இது. காதலர் தினத்தை முன்னிட்டு ரோஸ் டே, ப்ரொபோஸ் டே, சாக்லேட் டே உள்ளிட்ட கொண்டாட்டங்கள் வந்துவிட்டன. இதில் சிங்கிளாக இருப்பவர்கள், தனிமையை அரவணைக்கும் ‘சிங்கிள்ஸ் டே’ கூட இப்போது பிரபலமாகி வருகிறது. இப்படி பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காதலர் தினம், எப்போது தோன்றியது..? எதற்காக ‘வேலன்டைன்ஸ் டே’ என்று பெயர் சூட்டப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா..? அதுபற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

Valentine’s day என்பது செயிண்ட் வேலன்டைன் என்பவரைக் குறிப்பது என உலகம் முழுவதும் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. செயின்ட் வேலன்டைன் என்பவரைக் பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் நம்புவது இந்த கதையை தான். 3ஆம் நூற்றாண்டில், ரோமாபுரியை ஆண்ட மன்னன் பெயர் கிளாடியஸ் II. இவர் அண்டை நாடுகளை கைப்பற்றுவதிலும், போர் தொடுப்பதிலும் மிகத் தீவிரமாக இருந்து வந்தார்.

தனது ராணுவத்தில் உள்ள வீரர்கள் எந்தவித பயமும், தயக்கமும் இல்லாமல் சண்டையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கிளாடியஸ் II, வீரர்கள் அவர்களது மனைவி, காதலிகளை காண அனுமதிப்பதில்லை. காதலியை, குடும்பத்தை காணாத ஏக்கத்தில், போர்வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு அது போர்க்களத்திலும் தெரியத் தொடங்கியது. ஆனால், தனது கொள்கைக்கு காதல் தடையாக இருப்பதில் கிளாடியஸுக்கு துளி கூட இஷ்டமில்லை. அதனால், ரோமாபுரியில் திருமணத்தையே ஒட்டுமொத்தமாக அவர் தடை செய்தார்.

திருமணமாகாத இளைஞர்கள் சிறந்த போர்வீரர்களாக வருவார்கள் என்பதால், இப்படி ஒரு கொடூரமான விதியை அவர் நடைமுறைப்படுத்தினார். அரசனை எதிர்க்க யாருமில்லாததால், இளைஞர்களின் காதல் கைகூடாமலே போனது. அந்த நேரத்தில் வந்தவர்தான் வேலன்டைன். இவர், ரகசியமாக பல இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இதை தெரிந்துகொண்ட கிளாடியஸ் II, வேலன்டைனுக்கு மரண தண்டனை விதித்தார். கடைசி காலத்தை சிறையில் எண்ணிக்கொண்டிருந்த போது, வேலன்டைனால் ஒன்று சேர்ந்த காதல் ஜோடிகள், அவருக்கு ரகசியமாக ரோஜாக்களையும், சாக்லெட் உள்ளிட்ட உணவுகளையும் வழங்கி, தங்களது நன்றியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்த வேலன்டைனையும் காதல் விட்டுவைக்கவில்லை. சிறைக்காவலரின் மகளை காதலித்து வந்துள்ளார். இறப்பதற்கு முன், அந்த பெண்ணுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “உன் வேலன்டைனிடம் இருந்து” (From Your Valentine) என்று எழுதியிருந்தாராம். இந்த வாசகம் தான் இன்று கோடிக்கணக்கான கிரீட்டிங் கார்டுகளில் அச்சிடப்பட்டு வருகிறது. அவரை செயின்டாக அறிவித்து, அவர் இறந்த தினத்தையே ‘வேலன்டைன்ஸ் டே’யாக கொண்டாட முடிவெடுத்தது கத்தோலிக்க சர்ச்.

செயின்ட் வேலன்டைன் பற்றிய கதைகள் உண்மையோ, இல்லையோ. ஆனால், உலகம் முழுவதும் காதலர் தினம் இதுதான் என பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஒற்றை ரோஜா, கிரீட்டிங் கார்டு, சாக்லேட் என துவங்கி, வைர ஆபரணங்கள் வரை காதலர்கள் இன்றும் பரிமாறிக்கொள்கிறார்கள். இதனாலேயே காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல வியாபாரிகளுக்கும் மிக முக்கியமான நாளாகும். ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், வேலன்டைனுக்கும் தெரிந்த ஒரு உண்மை இதுதான். பரிசுகளோ, ஆபரணங்களோ அவசியமில்லை. நம்மை புரிந்துகொண்டு, காதலிக்கும் ஒரு மனம் அருகில் இருந்தால் போதும். எந்நாளுமே காதலர் தினம் தான்.

Chella

Next Post

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை!… அவசரகதியில் சட்டம் கொண்டுவர முடியாது!… மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

Wed Feb 14 , 2024
அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

You May Like