Poetry: உலக கவிதை தினம் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் மார்ச் 21-ம் தேதியை உலக கவிதை தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. பல நாடுகளில் பேச்சு நாகரிகம் கூட சரியாக இல்லாத காலத்தில் சங்கம் வளர்த்து கவிதை பாடிய மொழி நம் தமிழ் மொழி. அறம் பற்றியும் புறம் பற்றியும் கவிதை வடிவில் பல வரலாற்று உண்மைகளை கவிதை வழியாக அக்கால கவிஞர்கள் எழுதி இருந்தனர். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ள பல கவிதை நடை குறள்கள் உண்மையின் உயிர்நாடியாகவும், பண்பு, ஒழுக்கம், நட்பு, அறம் என பல விசயங்கள் குறித்த படிப்பினையாகவும் உள்ளது.
அரசர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழகத்தின் வளம் குறித்தவை மெய் கவிதைகள் வழியாகவே கிடைத்த வரலாறு என்றால் அது மிகையல்ல. வர்ணிக்கும் பொருட்டு கவிதையில் பொய் கலக்கலாம். ஆனால், மெய் கவிதைகள் தான் என்றுமே வரலாறாகவும், கல்வியாகவும் விளங்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஒரு மொழியின் வளர்ச்சி கவிதையில் தான் உள்ளது என்பதை என்றைக்குமே மக்கள் மறந்து விடக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களை மார்க் வாங்கும் இயந்திரங்களாக மட்டும் மாற்றாமல், சுயமாக சிந்தித்து கவிதை எழுதும் கவிஞர்களாகவும் மாற்றலாம்.
எங்கேயோ திடீரென நாம் வாசிக்க நேரும் கவிதை, நம்மை வருடிச் செல்கிறது. புன்னகைக்க வைக்கிறது. சோகத்தில் ஆழ்த்துகிறது. மறைந்து கிடந்த காயத்தைக் குத்திக் கிளறுகிறது. யாரோ ஒருவரை நம் நியாபகக் கற்றையில் இருந்து மீட்டெடுக்கிறது. பால்யத்துக்குக் கைபிடித்துக் கூட்டிச் செல்கிறது. நேசத்துக்கு உரியவருக்கு, ‘என்னை அனுப்பு’ என்று சொல்கிறது. ஓவியம், புகைப்படம் என கலை வடிவங்களில் முக்கியமான ஒன்று கவிதை. மானுட உணர்வுகளின் வடிகாலாய் காலத்துக்கும் அழியாது நிற்கிறது. கவிதை தினமான இந்த நன்னாளை, கவிதை எழுதியோ, பிடித்த கவிதைகளைப் பகிர்ந்தோ கொண்டாடுவோம்.
Readmore: இன்று உலக பொம்மலாட்ட தினம்!… அழிவின் பிடியில் இருந்து மீட்க அனைவரும் கைகோர்ப்போம்!