தற்போதைய நவீன காலகட்டத்தில் பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தாய் – தந்தை இருவருமே வேலைக்கு செல்லக்கூடிய நிலையில், குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. இது போன்ற சூழலில், குழந்தைகளுக்கு போன் கொடுத்து பழக்கப்படுத்துவது பலரது வீடுகளிலும் தற்போது நடந்து வருகிறது. ஆனால், குழந்தைகள் சிறு வயதில் இருந்து செல்போன் பார்ப்பதால், பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
குழந்தைகள் சிறு வயதில் இருந்தே போன் பயன்படுத்துவதால், அவர்களின் நினைவாற்றல் விரைவில் பாதிக்கப்படுமாம். மேலும், சிறு வயது முதலே அவர்கள் போனுக்கு அடிமையாக தொடங்கிவிடுவார்கள். இதை நிறுத்த முயற்சி செய்யும்பொழுது குழந்தைகளுக்கு கோவம், அடம்பிடித்தல், பிடிவாதம் போன்ற குணங்கள் அதிகமாக வெளிப்படும். டீன் ஏஜ் பருவத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கான எண்ணம் வருவதற்கு முக்கிய காரணமே ஃபோன் தான் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே குழந்தைகளுக்கு ஃபோன் கொடுப்பதையும், அவர்களின் முன்பு நாம் அடிக்கடி போன் பயன்படுத்துவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர் மணிமேகலை கூறுகையில், ”செல்போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட கோபத்தால் புதுக்கோட்டையில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமே நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகளுக்கு மொபைல் ஃபோன் எந்த அளவிற்கு ஆபத்து என்று. பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு கூட தற்போதைய பெற்றோர் செல்போன் கொடுத்து பழக்கப்படுத்தியுள்ளனர்.
குழந்தைகள் ஒரு வீடியோவை பார்த்துவிட்டால், நிச்சயம் அதோடு நிறுத்த மாட்டார்கள். தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இது கிட்டத்தட்ட அடிக்ஷன் போல மாறிவிடும். இதனால், முடிந்த அளவிற்கு குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 2 வயது வரை மொபைல் ஸ்க்ரீனை காட்டவே கூடாது. அதிகபட்சமாக வீடியோ கால் பேசலாம். 2 – 5 வயது வரை ஒரு நாளில் ஒரு மணி நேரம் வரை மட்டுமே மொபைல் ஸ்க்ரீனை குழந்தைகளுக்கு காட்டலாம்.
5 வயதாகும் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஆரம்பம் முதலே இந்த ஒழுக்கத்திற்கு குழந்தைகளை கொண்டுவர வேண்டும். மொபைல் பார்க்கக் கூடாது என்று சொல்வதை விட, அவர்களை மற்ற விஷயத்தை கவனம் செலுத்த விடலாம். ஒருவேளை மொபைல் பார்க்கும் நேரத்தை உங்கள் குழந்தைகள் நீட்டிச் சென்றால், இனி மொபைல் ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்று அதிரடியாக கட்டுப்பாடு விதிக்க பழகிக் கொள்ளுங்கள். குறிப்பாக, குழந்தைகள் முன்பு பெற்றோரும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
Read More : ’உங்களை நம்பி தான வந்தோம்’..!! கணவரை கட்டிப்போட்டு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வடமாநில இளைஞர்கள்..!!