B.E., B.Ed முடித்தவர்களும் பட்டதாரி ஆசிரியராகலாம் என உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் தெரிவித்துள்ளார்.
எப்படியாவது படித்து ஆசிரியராகி விட வேண்டுமென்பது பலரது கனவாக உள்ளது. மேலும், மாணவர்களை தன்பிள்ளைகள் போல் எண்ணி எப்போதும் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டுபவர் ஆசிரியர்கள் தான். அதேபோல், மாணவர்களின் திறமையை சரியான நேரத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் வழங்கி மேம்படுத்துவது ஆசிரியர்கள் தான். மாணவர்களுக்கு தலைமை தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப் பற்று ஆகியவற்றை கற்பிக்க உந்துதலாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
இதுபோன்ற பல காரணங்கள் இருப்பதால் தான், பலரும் ஆசிரியர் பதவியை விரும்புகின்றனர். ஆசிரியர் ஆவதற்கு கல்வித் தகுதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்புக்கு பின், நீங்கள் ஆசிரியராக வேண்டுமென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு பி.எட் படிக்கலாம்.
முதுகலை பட்டம் முடித்தவர்கள் ஓராண்டு B.Ed படிக்கலாம். அதுவே, 4 ஆண்டு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஓராண்டு B.Ed படிக்கலாம். டெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். B.A, B.Com, B.Sc ஆகிய பட்டப் படிப்புகளுடன் பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், B.E., B.Ed முடித்தவர்களும் பட்டதாரி ஆசிரியராகலாம் என உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ. படிப்பை முடித்து பி.எட் (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் இயற்பியல் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியலாம். இவர்கள், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.