திண்டுக்கல் அருகே, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே பழமையான 4 அடி உயரம், 6 அடி நீளம் கொண்ட நடுகல் இருப்பதை ஆய்வு குழுவினர் கண்டுபிடித்தனர்.
தாமரைப்பாடி அருகே, கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லில் 2 வீரர்களுடன் ஒரு பெண் இருக்கிறார்.அடுத்ததாக இரு நாகங்கள் இணைந்த நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் நாகர் என்னும் மக்கள் வாழ்ந்ததை குறிக்கிறது.இந்த நடுகல் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். நடுகல்லின் அமைப்பு, வீரர்களின் தோற்றம் ஆகியவை அதை உறுதி செய்கிறது.இந்த நடுகல்லை இன்றும் மக்கள் வழிபடுகின்றனர்.
மனிதன் காடுகளில் வாழ்ந்த ஆதி காலம் தொட்டே இயற்கையை வணங்கியும், மரணத்தைக் கண்டு பயந்தும் வாழ்ந்துள்ளான். அப்படி இறந்து போகும் மனிதன் எங்கு செல்வான் என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இறந்தவர்களுக்காக ஈமச்சின்னங்களை ஏற்படுத்தவும் பழகிக்கொண்டான். அவற்றில் ஒன்று கல்திட்டை. இவை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்தக் கல்திட்டைக்குள் வேட்டைக் காட்சிகளும், மனிதன் மற்றும் விலங்குகளின் உருவங்களும் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்தப் பாறை ஓவியங்களே நடுகற்களின் முன்னோடியாக இருக்கலாம்.