தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோயில். சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையான இக்கோயில் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
கோவில் உருவான வரலாறு : தீராத வெண்தொழுநோயால் மன்னன் அவதிப்பட்டு வந்தான். அதனைப் போக்க பரிகாரம் தேடி பல சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டான். அச்சமயத்தில் அரசனின் கனவில் அருள்மிகு ஆபத்சகாயர் தோன்றி, தன்னை 48 நாள்கள் வழிபட்டு வந்தால் வெண்தொழுநோய் மறையும் என்று அருளினார். மன்னன் இறைவனின் வாக்கின்படி தம் படையுடன் கிளம்பினான்.
அப்படி பாதிரி வனம் நோக்கி வருகையில் இரவாகிவிடவே, படையுடன் அருகிலிருந்த ஊரிலேயே தங்கினான். மீண்டும் ஆபத்சகாயேஸ்வரரான இறைவன் மன்னனின் கனவில் தோன்றி மன்னன் தங்கியுள்ள இடத்திலிருந்து ஒரு கல் தொலைவில் தாம் உள்ளதாக கூறினார். சூரியன் உதயமானதும் மன்னன் எழுந்து நீராடி பாதிரிவனம் வந்து ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரைக் கண்டு மகிழ்ந்து, தினமும் ஏழு சுற்றுகள் 48 நாள்கள் வலம் வந்து இறைவனைத் தொழுதான்.
மேலும் ஈசனை வழிபடுவதற்குகந்த இலைகளில் ஆறு இலைகளை தினமும் உண்டு வந்தான். ஆபத்சகாயேஸ்வரரின் அருளால் வெண் தொழுநோய் நீங்கப்பெற்றான். இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரரின் ஆலயத்தை கற்றளி கொண்டு மிக பிரமாண்டமாக அமைத்தான் என்பர்.
கோயில் அமைப்பு : அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழும் இக்கோயில் அன்று ஏழு திருச்சுற்றுகளுடன் இருந்ததாகவும் தற்போது மூன்று திருச்சுற்றுகளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு கருவறை மூலவர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் அம்பாள் ஸ்ரீ செளந்தரநாயகி. இருவரும் பக்தர்கள் வேண்டும் மகத்தான பலன்களைத் தரும் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர். இங்குள்ள சரபேசுவரர் சன்னதி கும்பகோணம் வட்டத்திலுள்ள சரபேசுவரர் சன்னதிகளில் முதலாவது என்ற பெருமையும் சிறப்பானது.
சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளும் ஒன்று சேர்ந்த சக்தியான ஸ்ரீசிவதுர்க்கையம்மன் இவ்வாலயத்திற்கு வருகை புரிந்த போது தன்னுடைய சக்தியான பார்வதியை “சௌந்தரமாக வா” என சிவபெருமான் அழைக்க பார்வதி அழகிய சொரூபமாக வெளிப்பட்டதால் இத்தல இறைவிக்கு சௌந்தர்ய நாயகி (சௌந்தரம் என்றால் அழகு) எனப்பெயர் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இக்கோயிலில் எந்த ஆண்டு இறுதியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது என தெரியாமல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலை கிராமமக்கள் முயற்சியாலும், இந்து சமய அறநிலையத்துறையாலும் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு செப். 3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக யுனெஸ்கோ ஆசிய – பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு சிறப்பு விருதை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Read more:நடிகை விவகாரம்.. மனைவி கயல்விழியுடன் காவல் நிலையத்தில் ஆஜராகும் சீமான்..!