உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுக்கூறும் பண்டிகை இதுவாகும். மேலும், இது கிறிஸ்தவத்தில் மிகவும் புனிதமான நாள். மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து வீட்டை விளக்குகள் மற்றும் மாலைகளால் அலங்கரித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில், உலகில் சில நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கிறிஸ்துமஸ் கொண்டாடினால் தண்டனை வழங்கப்படும்.
சோமாலியா
கிழக்கு ஆப்பிரிக்க நாடாக சோமலியா உள்ளது. இந்த நாடு ஒரு இஸ்லாமிய நாடாகும். இங்கும் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. இதனால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை அச்சுறுத்துவதாக உள்ளதாக கூறி இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா
சவூதி அரேபியா என்பது இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித பயணம் மேற்கொள்ளும் மெக்கா இங்கு தான் உள்ளது. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இங்கு பிற மத பண்டிகைகளை ஊக்குவிப்பது இல்லை. அதன்படி, பொதுவெளியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் கிறிஸ்தவர்கள் வீட்டிற்குள்ளேயே பண்டிகையை கொண்டாடுவார்கள். மீறினால் போலீசார் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
தஜிகிஸ்தான்
தஜிகிஸ்தான் முஸ்லீம் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாக கருதப்படுகிறது. இந்த நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு தஜிகிஸ்தானின் கல்வி அமைச்சகம், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் விழா சார்ந்த நன்கொடைகள் வசூலிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
புருனே
தென்கிழக்கு ஆசிய நாடான புருனேவிலும் பொதுவெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை உள்ளது. இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது இஸ்லாமியர்களை வழிதவறி நடக்க வைத்துவிடும் என்பதற்காக அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கிறிஸ்தவர்கள் தங்கள் வீட்டில் வைத்து கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொள்ளலாம். ஆனால், அதற்கும் அனுமதி பெற வேண்டும். மீறினால், 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வட கொரியா
வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இந்த நாடு கடும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே வடகொரியா கம்யூனிச நாடாகவும், அங்குள்ள அரசு நாத்திக அரசாகவும் உள்ளது. அதோடு டிசம்பர் 25ஆம் தேதி என்பது கிம் ஜாங் உன்னின் பாட்டி பிறந்த தினமாகும். இதனால் அவருடைய பிறந்தநாளை கொண்டாட மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.