இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில், இந்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புத்துறைக்கு ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 732 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் உள்பட முப்படைகளையும் பலமாக கட்டமைக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஊரக மேம்பாட்டு துறைக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறை கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களை மையப்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக மத்திய உள்துறை. இந்த துறையில் எல்லை பாதுகாப்பு படை உள்பட முக்கிய பாதுகாப்பு படைகள் வருகின்றன. நாட்டின் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய உள்துறைக்கு ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 211 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் விவசாயத்துறைக்கு ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 437 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 650 கோடியும், நகர மேம்பாட்டுத்துறைக்கு ரூ. 96,777 கோடியும், தகவல் தொடர்பு துறைக்கு ரூ. 95,298 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ. 98,311 கோடியும், சமூக நலத்துறைக்கு ரூ.60,052 கோடியும், அறிவியல் வளர்ச்சித்துறைக்கு ரூ.55,679 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜவுளித்துறைக்கு ரூ.5,272 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.