இனி வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் சமூக வலைதள கணக்குகள், மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீட்டுக் கணக்குகள் என பலவற்றை சட்டப்பூர்வமாக அணுக அதிகாரம் வழங்கி வருமான வரிச் சட்டம், 1961ஆம் ஆண்டில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ‘வருமான வரி மசோதா 2025’ ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய I-T மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது ‘வருமான வரிச் சட்டம், 2025’ என்று அழைக்கப்படும்.
எதற்கெல்லாம் வரி கிடையாது..?
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 கீழ் விவசாய வருமானம், கூட்டு நிறுவன லாபங்கள் மூலம் வரும் வருமானம், குடும்ப ஓய்வூதிய வருமானங்கள், உதவித்தொகை, அரசின் நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வருமானங்களுக்கு வரி கிடையாது. இந்த சூழலில் தான், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனி வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் சமூக வலைதள கணக்குகள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை சட்டப்பூர்வமாக அணுகுவதற்கு வருமான வரித்துறைக்கு அதிகாரம் வழங்கி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.