தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் அடிக்கடி பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட அப்டேட்டுகளை செய்திருக்க வேண்டும்.
அதனை ஆன்லைன் மூலம் எளிதில் செய்து விடலாம். இதற்கு முதலில் தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில், உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்ய வேண்டும். பிறகு மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதை கிளிக் செய்து குடும்ப உறுப்பினர் நீக்கம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், உங்களது ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்து ஓடிபி எண்ணையும் உள்ளிட வேண்டும். பிறகு பதிவு செய் என்பதை கிளிக் செய்து அட்டைப் பிறழ்வு மற்றும் புதிய கோரிக்கைகள் ஆகியவற்றை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக, ரேஷன் கார்டு என் ஆகியவற்றை சரிபார்த்து குடும்ப உறுப்பினர் நீக்கம் என்பதை தேர்ந்தெடுத்து யாரின் பெயரை நீக்க வேண்டுமோ அதனை செலக்ட் செய்ய வேண்டும்.
அடுத்ததாக எதற்காக பெயரை நீக்கம் செய்கிறீர்கள் என்ற அதன் காரணத்தை கூறி தேவையான ஆவணங்களை இணைத்து பதிவு செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், ஓரிரு நாட்களில் உங்களது பெயர் நீக்கம் செய்யப்பட்டு விடும்.