தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தோவுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என அரசு தேர்வுக்காக தயாராகி வருபவர்கள் காத்திருக்கிறார்கள்.
அந்தவகையில், நடப்பாண்டில் மீதமுள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாதத்தின் 2-வது வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறை குரூப் 4 தேர்வு நடைபெறும் போதும் சில ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு பல லட்சக்கணக்கானவா்கள் தேர்வை எழுதி வருகின்றனர்.
குரூப் 4 காலிப் பணியிடங்களை தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றபடி, அதிகரித்து அரசு வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும், காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதற்கு தேர்வில் வெற்றி பெற்றவா்களை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ரிசா்வ் செய்து வைத்து உடனுக்குடன் காலிப்பணியிடம் உருவாகிய உடனே அதை நிரப்புவதற்கு உண்டான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அரசு முன்வரவேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில், குரூப் 4 பதவிக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பது உறுதியாத நிலையில், குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பும் வரும் நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கான எழுத்துத் தேர்வு 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் 384 ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கும், அக்டோபரில் 400 தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள் என 13 வகையான துறை சார்ந்த காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோவுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.