நைட் ஷிஃப்ட் வேலை செய்வோருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அதிகம் வரலாம் என்பது தெரியவந்துள்ளது.
கல்லீரல் என்பது நமது உடலின் முக்கிய உறுப்பாகும். இது வளர்சிதை மாற்றத்தின் களஞ்சியமாகவும், ஊட்டச்சத்துக்களை செயல்படுத்துவதற்கும், தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செயல்பாடுகளில் பல, ஒரு குறிப்பிட்ட நேர வடிவத்தில் செய்யப்படுகிறது. கொழுப்பு, சர்க்கரையை உடைக்கும் கல்லீரலின் திறனானது ஒரு நாளின் நேரத்தை பொறுத்து அமைகிறது.
பாரம்பரிய சீன மருத்துவ கண்டுபிடிப்புகளின்படி, அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரல் அதிக ஆக்டிவாக இருக்கும். இதில் ஹார்மோன் வெளியீடு முதல் மெட்டபாலிசம் வரை அனைத்தும் அடங்கும். கல்லீரல் நம் உடலில் 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு பொறுப்பான ஒரு உறுப்பாகும். இரவு தாமதமாக தூங்குவதாலும், நள்ளிரவில் தின்பண்டங்களை சாப்பிடுவதாலும் அடுத்த நாள் காலை சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இந்த பழக்கங்கள் உங்களுடைய கல்லீரலை பாதித்து வருகிறது.
எனவே, இரவு நேரங்களில் தாமதமாக சாப்பிடுவது அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு உறங்குவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமானதாகும். மேலும், நைட் ஷிஃப்ட் வேலை செய்வோருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அதிகம் வரலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபேட்டி லிவர் நோய், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.