சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்ற விவரத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்த பின்னர், சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதியப்பட்டது. மேலும், தேனியில் அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் மே 8-ம் தேதியன்று தேனி கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக, மதுரையில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், மீண்டும் கோவை அழைத்து வரப்பட்டு, மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி மாவட்ட போலீஸார் சோதனை நடத்தினர். மதுரவாயலில் அமைந்துள்ள அவரது வீட்டிலும், தி.நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் சென்ற தேனி மாவட்ட காவல்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்ற விவரத்தை காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி சவுக்கு சங்கர் வீட்டில், குடும்ப அடையாள அட்டை, ஐபாட் டாப், மொபைல் போன், இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பணம், கம்ப்யூட்டர் மானிட்டர், டி.வி.ஆர், 5 கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக், பழைய பாஸ்போர்ட், சிகரெட் ஆஸ்ட்ரே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து, 3 லேப்டாப், 10 ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், செல்போன், நான்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சவுக்கு சங்கரின் கார் ஓட்டுனர் வீட்டில் இருந்து, 3 லேப்டாப், ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், சிறிய கஞ்சா பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.