கன்னம், தாடை பகுதி மற்றும் மூக்கு போன்ற இடங்களில் ஏற்படும் வலியை சாதாரணமாக கருதி மக்கள் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். கரண்ட் ஷாக் வைத்ததைப் போல இந்த பகுதிகளில் ஏற்படும் வலி என்பதே நமது தலைப்பகுதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் ஆகும். கீழ் பகுதி கன்னம் மற்றும் தாடை பகுதி போன்ற இடங்களில் வலி ஏற்படுவதும், சில சமயம் மூக்கு மற்றும் கண்களின் மேல் பகுதியில் வலி ஏற்படுவதும் trigeminal என்னும் நரம்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் அறிகுறிகள் ஆகும். இந்த நரம்புகள் தான் நமது நெத்தி, கன்னம் மற்றும் தாடை பகுதி ஆகியவற்றை இணைக்கிறது.
பொதுவாக இந்த வலி என்பது ஒரு பக்க கன்னத்தில் ஏற்படக்கூடிய வலியாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக நம் உடல் நலனை பாதிக்கக் கூடியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிலருக்கு விபத்துகளில் கன்னத்தில் அடிபடுவதன் காரணமாகவும், முகம் மற்றும் தாடை பகுதியில் செய்து கொள்ளும் அறுவை சிகிச்சையின் காரணமாகவும் இது போன்ற வலி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். “நம் தலையில் 12 ஜோடி Cranial நரம்புகள் உள்ளன. இதில் 5வது ஜோடியாக உள்ள trigeminal நரம்புகள் நமது கன்னத்தில் உணர்வுகளை ஏற்படுத்த பயன்படுகிறது. தலையின் இடது மற்றும் வலது ஆகிய இரண்டு புறங்களிலும் மூன்று கிளைகளாக பிரிந்து செல்கின்ற இந்த நரம்புகள் நமது கன்னம் முழுவதும் உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
எந்த வயதிலும் ஒருவருக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம் என்றாலும், 50 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம். தலைப்பகுதியில் ஆரோக்கியமாக உள்ள ரத்த நாளங்களில் ஏதேனும் ஒன்று trigeminal நரம்புகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதன் காரணமாக வலி உண்டாகலாம். நரம்புகளில் உண்டாகின்ற கட்டிகள் காரணமாகவும் இது போன்ற வலி ஏற்படலாம். கன்னத்தில் எங்கு வலிக்கிறது, எப்படி வலிக்கிறது என்பதை பொறுத்து இதற்கான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. எனினும் எம்ஆர்ஐ ஸ்கேன் முறை பொதுவான பரிசோதனை முறையாக கருதப்படுகிறது. ஆரம்ப நிலையில் மருந்துகள் மூலமாக இதை குணப்படுத்துவதற்கு மருத்துவர்கள் முயற்சி செய்வர். அவை பலன் அளிக்காத நிலையில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அறுவை சிகிச்சை காரணமாக மாறாத வடுக்கள் ஏற்படலாம்.