விற்பனையை அதிகரிக்க மாத்திரை தயாரிப்பு நிறுவனம் மருத்துவர்களுக்கும், விற்பனை முகவர்களுக்கும் ரூ.1,000 கோடிக்கு பரிசு பொருட்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது.
நாட்டில் மொத்தம் 9 மாநிலங்களில் 36 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ1.2 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ1.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். Dolo 650 மாத்திரைகளை, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலும் பரிந்துரை இல்லாமலும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். இந்த மாத்திரையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துகொண்ட தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. மோசடியின் மூலம் விற்பனையை அதிகரித்ததுடன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 6ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 4 நாட்களாக இது தொடர்பாக டோலோ 650 தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனையில் தங்கள் நிறுவனத்தை சேர்ந்த கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக மருத்துவர்களுக்கும், மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் சுமார் ரூ.1,000 கோடிக்கு பரிசு பொருட்களை வழங்கியுள்ளது. டோலோ-650 மட்டும் கொரோனா கோரதாண்டவம் ஆடிய மார்ச் 2020 முதல் 2021 டிசம்பர் வரை ரூ.567 கோடிக்கு விற்பனயாகியுள்ளது.