2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நடிகையுடன் தொடர்பில் இருந்ததை மறைத்ததாக டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 2006இல் ட்ரம்ப்பும், ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாச நடிகையும் ஆபாச உறவில் இருந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே ட்ரம்ப் மீது பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ள நிலையில், அதனை மறைப்பதற்காக ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பாக டிரம்ப் மீது 30-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டிரம்ப் மீதான் இந்த வழக்கு மன்ஹாட்டான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், ஆபாச நடிகைக்குப் பணம் வழங்கியதற்கான ஆதாரங்களையும் வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றியுள்ளதாகத் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ட்ரம்ப், அவராகவே முன்வந்து சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் அவரை அமெரிக்க காவல்துறையே நேரில் சென்று கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், அமெரிக்காவில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்படுவது போலவே, ட்ரம்ப் கையிலும் விலங்கு மாட்டி, சட்ட விதிகளுக்கு உட்படுத்தி கைது செய்வார்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு 2024இல் வர இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே ஜோ பைடன் அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் குற்றம் சாடியுள்ளார். இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.