உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட் தனது பெர்க்ஷயர் ஹாத்வே சாம்ராஜ்ஜியத்தை சொந்தமாக உருவாக்கியது மட்டும் அல்லாமல், இளம் வயதில் இருந்தே பங்கு முதலீட்டு வாயிலாக அதிகப்படியான பணம் சம்பாதித்து அதன் மூலம் பல நிறுவனங்களை வாங்கி தற்போது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் கீழ் அவருடைய முதலீடு, வர்த்தகம், கைப்பற்றிய நிறுவனம் என அனைத்தும் நிர்வாகம் செய்யப்படுகிறது. பெர்க்ஷயர் ஹாத்வே தலைவரான வாரன் பபெட் பெரும் பணக்காரர் என்பதில் மட்டும் ஸ்பெஷல் இல்லை, இவர் செய்யும் நன்கொடை பெரும் பணக்காரர்களை வியக்க வைத்து வருகிறது. 2006 முதல் பில் கேட்ஸ் உடன் இணைந்து வாரன் பபெட் பெரும் தொகையை அமெரிக்க மக்களின் நலனுக்காகவும், உலக நாடுகளுக்காகவும் நன்கொடை மூலம் செலவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாரன் பபெட் புதிதாக 4.64 பில்லியன் டாலர் மதிப்பிலான பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகளை ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இதன் மூலம் 2006 முதல் வாரன் பபெட் செய்த மொத்த நன்கொடை அளவு 51 பில்லியன் டாலரை தாண்டுகிறது. போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலின் படி வாரன் பபெட் சுமார் 117.3 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்புடன் உலகளவில் 6வது பெரும் பணக்காரராக உள்ளார். 92 வயதாகும் வாரன் பபெட் இதுவரையில் கொடுத்த நன்கொடையில் இதுவே அதிகமானது. இந்த முறை வாரன் பபெட் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் 13.7 மில்லியன் கிளாஸ் B பங்குகளை ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். இந்த பெரும் நன்கொடையில் வாரன் பபெட், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு 10.45 மில்லியன் பங்குகளை கொடுத்துள்ளார். வாரன் பபெட்-ன் 51 பில்லியன் டாலர் நன்கொடையில் 39 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்குகளை இந்த அறக்கட்டளைக்கு அளித்துள்ளார்.