கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2023–24 ஆம் ஆண்டில் தேசிய கட்சிகளுக்கு ரூ.20,000 க்கு மேல் நன்கொடைகள் 12,547 பங்களிப்புகளில் இருந்து மொத்தம் ரூ.2,544.28 கோடி கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 199 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.2,243 கோடியும் (88 சதவீதம்) காங்கிரஸ் கட்சிக்கு ரூ.281.48 கோடியும் நன்கொடை கிடைத்துள்ளது.
2022-23ஆம் நிதியாண்டில் ரூ.719.858 கோடியாக இருந்த பாஜகவுக்கான நன்கொடைகள் 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2,243.94 கோடியாக அதிகரித்து, 211.72 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.79.924 கோடியில் இருந்து 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.281.48 கோடியாக உயர்ந்து, 252.18 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
கட்சி வாரியாக பாஜக ரூ. 2,064.58 கோடியை (3,478 நன்கொடைகள்) பெருநிறுவனங்கள் மற்றும் வணிகத் துறை மூலமும், ரூ.169.126 கோடியை 4,628 தனிநபா்கள் மூலமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற தேசிய கட்சிகள் சிறிய அளவிலான நன்கொடையைப் பெற்றுள்ளன. தொடா்ந்து 18 வருடங்களாக ரூ.20,000-க்கு மேல் நன்கொடை எதுவும் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரூ.20 ஆயிரத்திற்கும் மேலான அனைத்து நன்கொடைகளுக்கும் ‘பான்’ கார்டு கட்டாயம் மற்றும் அரசியல் கட்சிகளின் முழுமையற்ற அறிக்கைகளை நிராகரித்தல் போன்ற விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டுமென்று ஏடிஆா் பரிந்துரை செய்தது. கட்சிகளின் நன்கொடைகள் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும். ஆர்டிஐ சட்டத்தின் கீழ் நன்கொடையாளா் விவரங்களை அறிய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.