ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளா் கே.விஜயேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ளாா். அதன்படி “ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தனி வங்கிக் கணக்கு இல்லாமல் கூட்டு வங்கிக் கணக்கு மூலம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த வழிகாட்டுதல்கள் கருவூல அதிகாரிகள், உதவி கருவூல அதிகாரிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது.
ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்த கூட்டு வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நிலையில், கூட்டு வங்கிக் கணக்கு மூலமாக மாத ஓய்வூதியத்தைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக ஓய்வூதியதாரா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கணவன் மற்றும் மனைவி இருவரும் ஓய்வூதியதாரா்களாக இருந்தால் அவா்களுக்கு ஓய்வூதியத்தை ஒரே கணக்கில் அளிப்பதிலும் சிரமம் இருக்கிறது. இதுபோன்ற காரணிகளால் ஓய்வூதியத்துக்கு கூட்டு வங்கிக் கணக்கு தேவை என்ற அறிவுறுத்தல்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஓய்வூதியம் பெறுவதற்கு ஒற்றை வங்கிக் கணக்கு இருந்தாலே போதும். இதனை ஓய்வூதியதாரா்களுக்கு கருவூல அதிகாரிகளும், உதவி கருவூல அதிகாரிகளும், ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளும் தெரிவிக்க வேண்டும் என தனது உத்தரவில் விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா். கருவூலத் துறையின் பழைய உத்தரவு காரணமாக, ஒற்றை வங்கிக் கணக்கை வைத்திருந்த ஓய்வூதியதாரா்கள், கூட்டு வங்கிக் கணக்குக்கு மாறிக் கொண்டிருந்தாா்கள். இப்போது உத்தரவு காரணமாக, ஒற்றை வங்கிக் கணக்கிலேயே ஓய்வூதியதாரா்கள் தங்களது ஓய்வூதியத்தைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரே வங்கிக் கணக்கில் கணவனும், மனைவியும் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தால் அவா்களுக்கு தொடா்ந்து ஒரே கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.