உங்களின் தனியார் பள்ளிகள் செழிக்க வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பகுதிநேர பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, என்னை வசை பாடியதாக அறிந்தேன். உங்கள் வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம். ஆனால், அரசுப் பள்ளியில் பயிலும் எங்கள் பிள்ளைகள் கற்க கூடாதா..?
மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம். இதற்காக நீங்கள் என்னை வசை பாடினாலும் சரி. நான் சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும் காணாமல் இருப்பதற்கு ஒரு கல் நெஞ்சம் வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி எங்கு சென்றது..? நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசுப் பள்ளியில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டா நிதி விடுவிப்பு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதியை விடுவிப்போம் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக விவாதங்கள் தான் சமீப நாட்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Read More : சாஹல் – தனஸ்ரீ விவகாரத்து உறுதி..!! அப்படினா அந்த விஷயம் உண்மையா..? முறைப்படி நீதிமன்றம் செல்ல சம்மதம்..!!