கொரோனா என்ற பெரும் அழிவில் இருந்து நாம் மீண்டு வந்த நிலையில், தற்போது கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் பலரையும் எச்சரிக்கை அடைய செய்துள்ளது. இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 21 நாளில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். இந்த வைரஸ் காய்ச்சலினால் 2 பேர் இறந்துள்ளதோடு 9 வயது குழந்தை உள்பட 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிபா வைரஸ் குறிப்பாக பழங்களை உண்ணும் வெளவால்களில் அதிகம் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட வெளவால்கள் பழங்களை கடிக்கும் போது, வெளவால்களின் உமிழ் நீரில் உள்ள வைரஸ் பழங்களில் கலந்து விடும். அந்த பழத்தை சாப்பிடும் நபருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகளே இந்நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பெரியவர்களை விட பலவீனமாக இருப்பதால், எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்ட பழங்களை கொடுக்க வேண்டாம் என்று தொற்றுநோயியல் துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.