குடிப்பழக்கத்திற்கு அடிமையான பேரனை, பாட்டி கண்டித்ததால் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம், நாயுடு தெற்குத்தெருவில் வசித்து வருபவர் நவநீதன். இவரது மனைவி சரஸ்வதி (75). நவநீதன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவநீதன் – சரஸ்வதி தம்பதிக்கு முத்துராஜா, பொன்னுத்தாயி, முருகேஸ்வரி, பாலசுப்பிரமணியன் என 4 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே திருமணமான நிலையில், தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாய் சரஸ்வதியுடன் அவரது 4-வது மகன் பாலசுப்பிரமணியன், அவரது மனைவி விஜி மற்றும் ஸ்ரீதர் (22), சூர்யா (19) ஆகிய இரண்டு மகன்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மூத்த மகன் ஸ்ரீதர் மது போதை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும், குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால், பெற்றோர் எவ்வளவு சொல்லியும் ஸ்ரீதர் கேட்கவில்லை. இதனால், குடித்துவிட்டு வந்தால், அவர்கள் எதுவும் கண்டுகொள்வதில்லை. ஆனால், பாட்டி சரஸ்வதி பேரனின் வாழ்க்கை சீரழிவதை எண்ணி, அவ்வப்போது ஸ்ரீதரை கண்டித்து வந்துள்ளார். அந்த வகையில், சம்பவத்தன்றும் ஸ்ரீதரை பாட்டி சரஸ்வதி திட்டி கண்டித்துள்ளார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த ஸ்ரீதர், ஆத்திரத்தில் பாட்டியை கீழே தள்ளிவிட்டு அடித்துள்ளார்.
வலியால் மூதாட்டி கதறி துடித்துள்ளார். அப்போதும், இரக்கம் இல்லாத ஸ்ரீதர் பாட்டி சரஸ்வதியை அரிவாள்மனையை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், பாட்டியின் இரு கால்களையும் பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து, தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், பாட்டியின் சடலம் அருகே ஸ்ரீதரும் போதையில் படுத்து தூங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாட்டி சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ஸ்ரீதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.