ஜார்கண்ட் மாநிலத்தில் பரவும் கோழி காய்ச்சலால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அங்குள்ள போகாரோ மாவட்டத்தின், லோஹஞ்சலில் அமைந்துள்ள அரசாங்க கோழி பண்ணையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன. கோழிகளின் இறப்பு தொடர்பாக மாவட்ட கால்நடை வளர்ப்புத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கோழி இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அம்மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது இறந்த கோழிகளின் மாதிரிகளை எடுத்து கொல்கத்தா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் அனைத்து கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அரசு கோழி பண்ணைகளில் 2 வகையான கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த 2 இனங்களிலும் கோழிகளின் இறப்பு காணப்படுவதால், அனைத்து கோழி பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.