கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பினு ஜேக்கப். இவரது மகள் அல்கா அன்னா பினு (20). இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில், பசில் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென பசிலிடம் பேசுவதை அல்கா அன்னா பினு தவிர்த்து வந்துள்ளார். போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பசில் கடந்த 5ஆம் தேதி அல்கா வீட்டுக்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற குடும்பத்தினருக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அல்கா அன்னா பினு மட்டும் ஆலுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வீடு புகுந்து மாணவியை வெட்டிய பசிலை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது வாலிபர் பசில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவியும் உயிரிழந்தார்.