அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சமீப நாட்களாக ‘ஜிப்லி’ புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஆனால், இதில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. இந்த ‘ஜிப்லி’ புகைப்படங்களை வழங்குவதற்கு தற்போது பல செயலிகள் உள்ளன. அதில், அங்கீகரிக்கப்படாத செயலிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்த செயலிகளில் பொதுமக்கள் ‘ஜிப்லி’ அனிமேஷன் புகைப்படங்களை பெறுவதற்காக தங்களது ‘பயோமெட்ரிக்’ தரவுகள், புகைப்படங்களையும் வழங்குகின்றனர். ஆனால், இதனை விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது, அவை ‘டீப் பேக்கு’களில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. ‘ஜிப்லி’ புகைப்படங்களை இலவசமாக வழங்கும் இணையதளம், ஒருவர் செல்போன் செயலிகளுக்குள் செல்லும்போது, அவரது செல்போனையும், கணினியும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவதற்கும், தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளது.
எனவே, அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையதளங்களில் இருந்து வால் பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். பரிவர்த்தனை, சுய விவரங்களை பதிவிடும் முன்பு சம்பந்தப்பட்ட இணையதளத்தின் நம்பகத் தன்மையை சரிபார்க்க வேண்டும். இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டால் ‘1930’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : அதிமுக – பாஜக கூட்டணி உறுதி..!! மீண்டும் நானே தலைவர்..? அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!