ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும் விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதங்களை கேட்ட நீதிபதி, அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுத்ததற்கு போலீசார் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். உள்ளூர் நிலவரங்களை பொறுத்து மாவட்ட நிர்வாகம் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து, பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை கருத்தில் கொண்டு ஊர்வலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.